Tuesday 12 February 2013

பாம்பு பால் குடிக்குமா?

பாம்புக்கு பால் வார்க்கும் வேலையை சினிமாவும் நிறுத்தவில்லை,சாமியார்களும் பக்தர்களும் நிறுத்தவில்லை. பாம்பு cold blooded வகையை சேர்ந்தது. உடல் உஷ்னத்தை நம்மைப் போல் கட்டுப்படுத்தும் சக்தி கிடையாது. அப்பாடா களைத்துப் போனேன் என்று வியர்வை துடைக்க பாம்பினால் முடியாது.
பாம்பு உணவை அப்படியே எடுத்துக் கொண்டு,சிறிது சிறிதாக பின்னே தள்ளுகிறது.முற்றாக செமிபாடு ஆக இரண்டு நாளில் இருந்து இரண்டு வாரங்கள் ஆகிறது.அதனால் உணவை எடுத்துக் கொண்டதும்,எங்காவது புற்றிலோ,பாறைகளுக்கு அடியிலோ சரணாகதி அடைந்து விடுகிறது. நம்மைப் போல் கல்யாண சமையல் சாதம் என்று,மூக்கு முட்ட ஒரு பிடி பிடிக்கத் தெரியாது.உணவில் இருந்து பெற்றுக் கொள்ளும் நீர் அதற்கு போதுமானதாகும்.பாம்பு பாலை மட்டுமல்ல எதையும் குடிக்காது.நாம் நமது உதட்டில் ஒரு சில துளிகளை வைத்தால் உள்ளே உறிஞ்சிக் கொள்வது போல்,ஒரு சில துளிகளை உறிஞ்சிக் கொள்ளலாமே தவிர பால் குடிப்பதற்கு கடவுள் வழி செய்யவில்லை.
தோலை கழற்றும் சமயங்களில் சிறிது அதிக தண்ணீர்தன்மை தேவைப்படுகிறது அவ்வளவு தான்.பாம்பிற்கு பாலை வாயில் பாலாத்காரமாக செலுத்தினால் தவிர பாம்பினால் பாலைக் குடிக்கவும் முடியாது, அதை செமிபாடு செய்யவும் முடியாது,மீறி நாம் பாலை பாம்பின் வாயிற்குள் பலாத்காரமாக செலுத்தினால்,அதை செமிபாடு செய்ய முடியாமல் அதுவே பாம்பிற்கு நஞ்சாகி செத்து விடும்.
நாம் நாக்கால் சுவைப்பது போன்று,மூக்கால் உணவின் மணத்தை தெரிந்து கொள்வது போன்று,பாம்பு நாக்கால் (நாக்கு என்று சொல்லப்படும் பாகத்தால்) இரையை, நாக்கை வெளியே நீட்டுவதன் மூலம், மணத்தை அறிந்து கொள்கிறது. பாம்பிற்கு அசையும் கண்ணோ,வெளிக் காதுகளோ கிடையாது.இருந்தும் இன்றும் படித்தவர்கள் கூட பாம்பிற்கு பால் ஊற்றுவதை நிறுத்தவில்லை.
பாம்பாட்டியின் நாதத்தைக் கூட பாம்பினால் கேட்க முடியாதென்பதும்,பாம்பாட்டியின் அசைவை வைத்தே அது அசைகிறது என்பதையும் இன்னமும் நாம் ஏற்றுக்கொள்ளவில்லை.ஆனாலும் மிக மென்மையான சத்தத்தை 200 முதல் 300 Hz வரை,நிலத்தில் அசையும் போது ஏற்படும் அதிர்வுகளை,காற்றினால் ஏற்படும் அதிர்வுகளையும் பாம்பினால் ஏற்றுக் கொள்ள முடியும்.அதற்கு வெளிக் காதுகள் இல்லாத நிலையில் வெளி தோல் மற்றும் எலும்புகள் மூலம் கிரகிக்கப்பட்டு உட்காதுகளுக்கு கொண்டு செல்லப்படுகிறது. ஆனாலும் பாம்பாட்டியின் மகுடியின் சத்தத்தையோ அல்லது எகிப்து போன்ற சில நாடுகளில் உள்ள பாம்பாட்டிகளின் புல்லாங்குழல் இசையையோ கேட்க அதனால் முடியாது.
அத்துடன் பாம்பிற்கு ஆறாவது அறிவும் உண்டு.பாம்பின் முன் பகுதியில் உள்ள சிறிய பகுதியின் மூலம் வெளி வெப்ப நிலையை அறிந்து கொள்ளுகிறது. நமக்கு இருக்கும் ஆறாவது அறிவை நாம் தான் பாவிப்பதில்லையே.

No comments:

Post a Comment